Companies: | 51,220 |
Products and Services: | 2,875 |
Articles and publications: | 31,348 (+2) |
Tenders & Vacancies: | 17 |
மகா சிவராத்திரி
சிவபெருமானை வணங்குவதற்கு மிகவும் ஏற்ற புண்ணிய தினமாக, மகா சிராத்திரி விளங்குகிறது. இது, மாசி மாதம் (பிப்ரவரி மத்திய காலம் முதல் மார்ச் மத்திய காலம் வரை) கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் வரும் சதுர்தசி அன்று கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு மகா சிவராத்திரி வருடம் ஒருமுறை அனுசரிக்கப் படும் அதே நேரம், மாதா மாதம் வரும் தேய்பிறை சதுர்தசி சிவராத்திரி என்று கடைபிடிக்கப்படுகிறது.
புராணக் கதை
மகா சிவராத்திரி எவ்வாறு துவங்கியது என்பது பற்றி, புனித நூல்கள் விரிவாக எடுத்துறைக்கின்றன.
புராணக் கதைகளின் படி, ஒருமுறை, பிரளயத்தின் பொழுது, உலகங்கள் அனைத்தும் சிவபெருமானிடம் அடங்கி, அவரிடம் ஒடுங்கிப் போயின. இந்த நிலையைக் கண்டு வருந்திய உலக மாதாவான அன்னை, இவ் உலகங்கள் மீண்டும் வெளிவந்து, இவற்றில் ஜீவராசிகள் தோன்றிப் பல்கிப் பெருகவேண்டும் என வேண்டி, மனதை ஒருமுகப் படுத்தி, சிவபெருமானைக் குறித்து கடுமையாக தியானம் செய்தார். இதனால் மகிழ்ந்த இறைவன், அனைத்தையும் மீண்டும் படைத்தருளினார்.
இதனால் மனநிறைவு அடைந்த அன்னை, சிவபெருமானை தியானித்து அவரது கோரிக்கைகள் நிறைவேறியது போலவே, அந்த இரவில் சிவபெருமானை விரதமிருந்து வணங்குபவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றும் வேண்டினார். இறைவன் அவ்வாறே அருள் புரிந்தார். அந்த இரவே சிவனுக்குரிய இரவான சிவராத்திரியாக போற்றப்படுகிறது.
மகா சிவராத்திரி நோம்பு
ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரி மாத சிவராத்திரி என்பதையும், வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் அனுசரிக்கப்படுவது மகா சிவராத்திரி என்பதையும் நாம் அறிவோம். இந்த இரு வகையான சிவ ராத்திரிகளைத் தவிர, நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி போன்ற சிவராத்திரி தினங்களும் மக்களால், குறிப்பாக சிவ பக்தர்களால் பக்தியுடன் கடைபிடிக்கப்படுகின்றன.
எந்தப் பெயரில் அழைக்கப் பட்டாலும் சரி, சிவராத்திரி நிகழ்ச்சிகளில் நோம்பு எனப்படும் வழிபாட்டு முறையும், பூஜைகளும் முக்கிய இடம் வகிக்கின்றன.
நோம்பு, விரதம் என்றெல்லாம் அழைக்கப்படும் வழிபாடு, பொதுவாக, பக்தர்கள் தங்களது சில தேவைகள், தாங்கள் தினந்தோறும் அனுபவிக்கும் சில வசதிகள் அல்லது தங்களது தினசரி நடவடிக்கைகள் போன்றவற்றை விலக்கி வைத்து, அன்றைய பொழுதை இறைவனை நினைப்பதிலும், அவரைப் பூஜிப்பதிலும் கழிப்பது, ஆகும்.
இது போன்ற நோம்புகள் மற்ற பண்டிகைகளின் பொழுதும், புனித நாட்களின் பொழுதும் அனுசரிக்கப் பட்டாலும், சிவராத்திரி தினத்தன்று, இது தனிச் சிறப்பு கொண்டதாக விளங்குகிறது.
சிவராத்திரி நோம்பின் முக்கிய அம்சம், உபவாசம், அதாவது உணவைத் துறப்பது எனலாம். சிவராத்திரி நோம்பைக் கடைபிடிக்கும் சிவ பக்தர்கள் அனைவரும் சிவனுக்கு உரிய அன்றைய தினத்தில் தவறாமல் அனுசரிப்பது, இந்த உண்ணா நோம்பான உபவாசம் ஆகும்.
மக்கள் சிவராத்திரி அன்று காலையில் எழுந்ததும் குளித்து முடித்து, பின்னர் பூஜை, வழிபாடுகள் போன்றவற்றைச் செய்கின்றனர். அன்று முழுவதும் உபவாசம் இருக்கும் அவர்கள், அன்றய நாட் பொழுதை, சிவ பெருமானின் பெருமைகளைப் பேசுவதிலும், அவர் குறித்த புராணங்களைப் படிப்பதிலும், கேட்பதிலும், அவர் புகழ் பாடும் மந்திரங்களை ஓதுவதிலும் செலவிடுகின்றனர்.
பின்னர் சிவ ராத்திரியான இரவுப் போழுது முழுவதும் கண் விழித்து சிவ பூஜை செய்கின்றனர். பலர், ஆலயங்களுக்குச் சென்று அங்கு, 4 காலங்களிலும் நடைபெறும் அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, பூஜை போன்ற வழிபாடுகளின் பங்கு கொள்கின்றனர். இவ்வாறு சிவனுக்குரிய இரவு முழுவதும், சிவ வழிபாட்டிலேயே கழிக்கின்றனர்.
அடுத்த நாள் காலையில் மீண்டும் நீராடி, இறை வழிபாடு செய்து, உணவருந்தி தங்களது, சிவராத்திரி நோம்பு அல்லது விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
உடல் நிலை காரணமாகவோ, வேறு காரணங்களாலோ இவ்வாறு முழுமையாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், சிவராத்திரி அன்று குடும்பப் பெரியவர்கள், ஆன்மிக குருக்கள் போன்றவர்களின் வழிகாட்டுதல் படி, இந்த நோம்பை அனுசரிக்கலாம்.
இங்கு பக்தர்களிடன் இறைவன் எதிர்பார்ப்பது, உண்மையான பக்தியும், தளராத நம்பிக்கையும் தான், என்பதைக் கருத்தில் கொண்டு, சிவராத்திரி நோம்பு அனுசரித்து, வழிபாடுகள் செய்தால், இறையருள் நிச்சயம் நமக்குக் கிடைக்கும்.
நான்கு கால பூஜைகள்
இந்த நோம்புடன் கூட, இரவு முழுவதும் சிவ ஆலயங்களில் நடைபெறும் 4 கால பூஜைகளும், சிவராத்திரி வழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.
புராணங்களின் படி, இரவின் முதல் ஜாமத்தில் வழிபட வேண்டிய கடவுள், சிவபெருமானின் சோமாஸ்கந்தர் வடிவம் ஆவார். அந்த இறைவனுக்கு பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்து, வில்வத்தால் அலங்காரம் செய்து, தாமரை மலர் அர்ச்சனை செய்து, சக்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம்.
இரண்டாம் ஜாமத்தின் இறைவனான தென்முகக் கடவுளுக்கு பஞ்சாமிருத அபிஷேகம் செய்து, குருந்தை மலரால் அலங்கரித்து, துளசி இலை அர்ச்ச்னை செய்து, பாயசம் நிவேதனம் செய்யலாம்.
சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தின் கடவுள் லிங்கோத்பவருக்குத் தேன் அபிஷேகம் செய்து, விளா மலரால் அலங்கரித்து, சாதி மலரால் அர்ச்சனை செய்து, எள் அன்னம் படைத்து வழிபடலாம்.
சிவராத்திரியின் கடைசி நான்காம் ஜாமத்தில் பூஜிக்க வேண்டிய கடவுள் ரிஷபா ரூடரான சந்திர சேகரர் ஆவார். இவருக்கு, கருப்பஞ்சாறு கொண்டு அபிஷேகம் செய்து, கரு நொச்சி மலர் கொண்டு அலங்காரம் செய்து, நந்தியாவட்டையால் அர்ச்ச்னை செய்து, வெண் சாதம் நிவேதனம் செய்யலாம்.
மகா சிவராத்திரி பலன்கள்
மகா சிவராத்திரி நோம்பு வழிபாடுகள் பாவத்தைத் தொலைக்கும். புண்ணியம் சேர்க்கும். பொருளாதார நிலையை உயர்த்தும். மோசமும் அருளும்.